Wednesday, February 11, 2009

முடிந்த ஆண்டு உருது கவிஞரான உலகக் கவிக் கோமான் அல்லாமா இக்பாலின் நூற்றாண்டாகும்.

சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1871 ஆம் ஆண்டு நவம்பர் 9 தேதி சியால் கோட் என்ற இடத்தில் ஒரு ஏழை தையல் காரனின் மகனாக பிறந்தார் அல்லாமா இக்பால் அவர்கள்.

இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள்: இரண்டு சகோதரர்கள். வீட்டில் கடும் வறுமை. இளமையும் வறுமை.

படிப்பில் ஆர்வமானவரான இக்பால் கல்லூரியை எட்டி பிடித்தார். படிப்படியாக பட்ட படிப்பில் முன்னேறிய இவர் பி.ஏ - எம்.ஏ பட்டங்களை வெகு சுலபமாக பெற்றுக் கொண்டார். பின்னர் தத்துவத்தில் டாக்டர். பட்டத்தையும் பெற்றார். பின்னர் சட்டப் படிப்பில் நுழைந்து பார்-அட்-லா என்ற (சட்ட நிபுணர்) பட்டத்தையும் பெற்றார்.

இவை தான் இக்பால் அவர்களின் சுருக்கமான இவரது வரலாறாகும்.

இவைகளல்ல நாம் இக்பால் அவர்களை ஞாபகப்படுத்தி போற்றுவதற்குரிய காரணங்கள்.

மாபெரும் மக்கள் கவிஞராக அவர் முகிழ்ந்து தான் அவரை இன்றும் உலகில் கோடானு கோடி மக்கள் மதித்து போற்றுவதற்குரிய அடிப்படையாகும்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மிக சிறந்த கவிஞர்களில் இக்பாலும் ஒருவர். இந்த நூற்றாண்டு கடமை பட்டுள்ள கவிஞர்களில் இவரும் முக்கியமானவர்.

உழைக்கும் மக்களுக்காகவே அவரது பேனா முனை அசைந்தது. அவர் பாடுபடும் மக்களின் பக்கம் வலுவாக காலூன்றி நின்று கொண்டுதான் உலகத்தை பார்த்தார். தனது கவிக் குரலை வானம்பாடிக் கீதமாக்கினார். உலகப் பாட்டாளி வர்க்கத்தை ஒரு சேர நோக்கி கீதமிசைத்தார்.

அவரிடம் மத உணர்ச்சி இருந்தது. அந்த மத உணர்ச்சியில் எந்தவிதமான குறுகிய தன்மைகளும் - தனிமைப்படும் போக்குகளும் காணப்படவில்லை.

குரான் தொழிலாளிகளுக்கு உற்ற நண்பன்!
முதலாளிகளுக்குச் சாவு மணி!!
என துணிந்துரைதவர் இக்பால்.

கவிதைத் துறையிலும் சரி, பொதுவாழ்விலும், மத வாழ்கையிலும் சரி குறுகிய எண்ணங்கள், மனப்பான்மைகள் அவரிடம் கிஞ்சித்தும் இருந்தது இல்லை. தன்னிடம் அப்படி இருக்க அவர் அனுமதிக்க வில்லை.

இக்பாலுக்கு முன்னுள்ள உருது கவிஞர்கள் சகலரும் நமது பாரதி காலத்து மரபுக் கவிஞர்களை போல பெண்ணையும், விண்ணையும், மலரையும், தென்றலையும், சூரியனையும், சந்திரனையும் பாடிக் கொண்டிருந்தனர். தமது கவிதைக்குக் கவிப் பொருளாக இவைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

பாரதியை போல், இக்பால் அவர்களும் பாமர மக்களைப் பாடினார். சுரண்டப்பட்ட, அடிமைபடுத்தப்பட்ட மனித சனங்களைப் பற்றி கவிபொருள் செய்தார்.

"ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி!" என அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ரஸியா வில் நடைபெற்ற அந்த மாபெரும் சோவியத் புரட்சிப் பற்றி முதன் முதலில் இனங் கண்டு பாடியவன்-கவிகுரல் எழுப்பியவன்- பாரதி. தமிழ் கவிஞனாக இருந்த போதிலும் கூட, உலக நிகழ்வை பற்றி வெகு திறமையாக, கூர்மையாக இனங் கண்டார். அக்கவிஞன்.

இந்தப் புரட்சி பற்றிச் சரியான கணிப்புடன் இனங் கண்டு பாடிய இந்திய கவிஞர்கள் வெகு சிலரே. அவர்களில் அல்லாமா இக்பாலும் ஒருவர்.

மகா கவிஞர்கள் ஒரு சகாப்தத்தின் தீர்மானமான குரலை ஒலிப்பவர்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துகாட்டு. தீர்கதரிசனத்துடன் மனித குலத்துக்கு சோவியத் புரட்சிப் பற்றி எடுத்துக் கூறினார்.

கம்பீரமான வார்த்தை பிரயோகங்கள், உலக அன்புத் தத்துவம், மானுட மதிப்பின் மீது அசையாத பக்தியும் உழைக்கும் வர்கத்தின் மீது ஆழமான நம்பிக்கையும் கொண்ட கவிஞர், மனிதன் மீதும் - மனிதன் செயல்கள் மீதும் எதிர்கால நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவருடைய கவிதை மொழி இது:

மனிதா! நீ ராஜாளிப் பறவை.
ஓய்வரியாப் போராட்டத்தில் மேலே....மேலே...
முன்னேறி செல்!


(1978 ஆம் ஆண்டு ஜனவரி மல்லிகை இதழில் வெளியான கட்டுரை)

No comments: